
ஆடுகளத்தில் சிதையும் பண்பாடு
’கொன்டே புடுவேன்’ – என்று ஆடுகளம் திரைப்படத்தின் நாயகன் யாரையோ பார்த்து நான்கு வாரமாக மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் யாரை மிரட்டுகிறார் என்று வெள்ளித்திரையில் கண்டு அதிர்ந்து போக வேண்டியிருந்தது. அவர் மிரட்டியது தனது தாயை என்று தெரிந்ததும் ஆர்வமத்தனையும் வருத்தமாய் மாறியது.
முன்பெல்லாம் டிரெய்லர் நேரம் என்று தனியாக ஒரு அரைமணிநேரம் அதுவும் பதினோர் மணிக்கு மேல் வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும். ஆனால் இன்று முன்னோட்டக் காட்சிகளுக்கு இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சூழல் உருவாகி விட்டது.
தமிழ்த் திரைபடங்களில் தமிழர் வாழ்நிலை பதிவாகவில்லை என்று ஒரு பெரும் வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் சமீபமாக வெளியாகிக் கொண்டிருக்கும் கிராமம் சார்ந்த திரைப்படங்கள் வாயிலாக அது நிரைவேறிக் கொண்டிருக்கிறது என்று முழுமையாக சந்தோஷப் பட்டுக் கொள்ளவும் முடியாது.
பாரதிராஜா, கஸ்தூரிராஜா போன்றவர்கள் கிராமத்திற்கே போய் படச்சுருள்களை காட்சிகளால் நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் வரிசையில் இப்பொழுது கிராமத்தை படம் பிடித்துக் கொண்டிருப்பவர்களை சேர்க்கலாமா என்று யோசிக்கத்தான் வேண்டும். முந்தைய இயக்குனர்கள் சொலவடைகளையும் சில மண்சார்ந்த பண்பாடுகளையும் வழிபாடுகளையும் என பல பாடுகளை கதையினூடாக படம் பிடித்தார்கள் என்றால் இன்றைய இயக்குனர்கள் மதுரை மாவட்டத்தை தாண்டி களமில்லை, கதையில்லை என்று அங்கேயே டேரா போட்டு விட்டார்கள்.
வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தில் மதுரையைச் சார்ந்த ஒரு இளைஞனின் கதை சொல்லப் பட்டிருந்தது என்பதற்காக வாரிச் சுருட்டிக் கொண்டு எல்லோரும் மதுரைக்கே பயணப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மண் சார்ந்த படமென்றால் மதுரையும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரும் மட்டுமே காட்டப் படுவது ஒட்டு மொத்த தமிழகத்திற்கே அடையாளம் கொடுப்பது போல் இல்லையா?.
தமிழகத்தின் தலைநகராக மதராஸ் இருந்த காரணத்தினாலேயே இல்லை அதற்கு முன் தமிழகமே மதராஸ் ஸ்டேட் என்று அழைக்கப் பட்டதினாலோ இன்று தமிழ் பேசும் அனைவரையும் ‘ மதராஸி’ என்று விளிக்கும் வடமாவட்டக்கார்ர்களைப் போல் இனி தமிழர்கள் என்றால் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சதா குடித்துக் கொண்டும் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டும் அலைவார்கள் என்று முத்திரைக் குத்தப் படலாம் என்று தோன்றுகிறது.
சமீபத்திய திரைப்படங்களில் காட்டப் படும் இளைஞர்களின் போக்கும் நடவடிக்கையும் பேச்சும் எல்லாமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. எதாவது ஒரு வகையில் ஆயுதம் தூக்கி விடுகிறார்கள். காரணங்களும், பாணியும் வேறு வேறாக இருந்தாலும் கதையும், களமும், கையிலெடுக்கும் ஆயுதமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்கள் நிர்ணயித்த அளவுகோலைக் கொண்டு சமீபத்தில் வந்த அத்தனைப் படங்களும் அளவிடவும் மதிப்பிடவும் படுகின்றன என்பது வேதனை. புதிய இயக்குனர்களும் அவர்களின் கதையை இந்த பாணிக்கு தக்கபடி கட்டமைப்பதும் கவலைக்குறியதுதான்.
உலகமெங்கும் அறியப் பட்ட ‘ பைசைக்கிள் தீவ்ஸ்’ திரைப்படத்தின் கதையை கருவாக்க் கொண்டு பொல்லாதவன் என்ற படத்தை இயக்கிய வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழகத்தின் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் மூலம் வெளியிடவும் பட்டிருக்கிறது. இரண்டாவது காரணம் போதுமே படம் வெற்றி பெற.
ஆடுகளம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். பருத்திவீரனையும் சுப்பிரமணியபுரத்தையும் பார்த்தவர்கள் இதே அளவுக்குத்தான் ஆட்டம் போட்டார்கள். இம்மாதிரியான திரைப்படங்களை வெற்றிபெறச் செய்வது யார்? இளைஞர் பட்டாளம் என்றால் அவர்களுக்கு ஏன் இம்மாதிரியான படங்கள் பிடித்துப் போகிறது? ஒருவேளை பழக்கப் படுத்தப் பட்டதனாலா? இப்படியான கேள்விகளைக் கேட்டு சமாதானமாகிக் கொள்ள வேண்டியதுதான்.
ஆடுகளம் அத்தனை பழுதானப் படமில்லை என்றாலும் படத்தில் புதுமையில்லை என்பது நிதர்சனம். சேவல் சண்டையும் அது குறித்த பின்னணியையும் கதையோடு பதிவு செய்திருப்பது நன்று. ஆனால் தமிழர் பண்பாடு பதிவாகிக் கொண்டிருப்பது குறித்து ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் ஒரு புதிய பண்பாடு பரவிக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
மதுரை மாவட்ட பின்னணியில் எடுக்கப் பட்ட பெரும்பாலானத் திரைப் படங்கள் வெற்றிப் படங்கள் தான் இவை அனைத்திலும் நாயகன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பான், இல்லை பொறுப்பில்லாத, ஊதாரித் தனமான, பெற்றோரை மதிக்காத எப்பொழுதும் எந்தவொரு காரணத்துக்காகவும் குடித்துக் கொண்டிருக்கிற குணாம்சங்களோடு இருப்பான். இப்படியான ஒரு இளைஞனை விரட்டி விரட்டி காதலிப்பாள் நாயகி. அவனுக்காக செத்தும் போவாள், ஊரை விட்டு ஓடியும் போவாள். தமிழ் சமூகப் பெண்கள் இப்படியா இருக்கிறார்கள், இப்படி இருந்தால் நலம் என்று சொல்கிறார்களா?
சமூகத்தின் அத்தனை ஒழுக்கக் கேடான பழக்கங்களையும் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் மீது எப்படி ஒரு பெண்ணுக்கு காதல் மலரும் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அப்படியான இளைஞர்கள் மீது காதலை உண்டாக்கி அவர்கள் மட்டுமே காதலிக்க தகுதியானவர்கள் என்றும் மற்றவர்கள் சரியான சோப்ளாங்கிகள் என்றும் நம்ப வைத்து விட்டார்கள் தமிழ் இயக்குனர்கள். குடியில் மூழ்கிய ஒருவன் பத்துபேரை அடித்து துவைக்கும் பலம் பெற்றவனாக காட்டப் படுவது அறிவியல் விதிக்கு புறம்பானது இல்லையா?
நல்ல ஆரோக்கியமும் நாகரீகமும் நல்லொழுக்கமும் கொண்ட இளைஞர்கள் பாஸ் மார்க் வாங்குவதில்லை. இறுபது நாள் சவரம் செய்யாத முகமும், உள்ளாடைத் தெரிய ஏத்திக் கட்டிய லுங்கியும், காலை- மாலை என்று காலம் கருதாமல் தவறாது டாஸ்மாக்கில் மது அருந்தும் பழக்கமும், பெற்றோரை ’ஏய் பெரிசு’ என்றும் ஆசிரியரை ’ஏய் வாத்தி’ என்றும் அழைக்கும் மரியாதையும் கொண்டவர்களே முழு மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
ஆடுகளம் திரைப்படத்திலும் வழக்கமான கதை சொல்லல் பாணிதான். அதே சமயம் கதையும் அத்தனை புதுமையல்ல. திரைக்கதையிலாவது இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். அங்கேயும் பெரிதாய் உழைக்கவில்லை. இடைவேளை வரை உற்சாகமாகப் பயணிக்கும் படம் இடைவேலைக்குப் பின் படுத்து விடுகிறது. அது சரியென பலர் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இடைவேளைப் பகுதியிலேயே இனி என்ன நடக்கும் என்று யூகிக்க அல்ல நிச்சயமாகவே சொல்லிவிட முடிகிறது. முழுப் படத்திற்கும் காசு கொடுத்துவிட்ட காரணத்தால் அரைப் படத்தில் எழுந்து போகாமல் இருக்க நேரிடுகிறது. முன்பாதி கூட ரசிக்கும்படியாக இருப்பதன் காரணம் இரண்டு குத்துப் பாடல்கள்தான் என்று சொல்லலாம்.
இதற்கு முன்னால் வந்த வெற்றிப்படமொன்றில் ’கொலைக் குற்றத்தில் கைதான அவனையாடி நீ காதலிக்கிற?’ என்று நாயகியின் தோழி கேட்க. ’அவன் என்ன செஞ்சான்னு எனக்கு தெரியாது ஆனா அவன எனக்கு சின்ன வயசிலேயிருந்து பிடிக்கும்’ என்று பதில் சொல்கிறாள் நாயகி. ஏதோ பைய்தியக்கார சமூகத்தில் சிக்கிக் கொண்டதாக இருக்கிறது இவர்கள் பேசும் வசனம். காதலிக்காக பெற்றொரை அடித்து உதைக்கும் இயல்புடைய நாயகர்களே இன்று வெற்றி வாகை சூடுபவர்களாக இருக்கிறார்கள். திரைப்படம் என்பது திட்டமிடப் படும் ஒரு புனைவு. பலர் பங்கீட்டில் உருவாகும் ஒரு படைப்பு. இவ்வாறன தவறுகளுக்கு இப்படைப்பு பணியில் இருக்கும் யாராவது ஒருவர் கூடவா எதிர்ப்பு காட்டவில்லை.
நடிப்புக்காகக் கூட ஒரு திரைப்படத்திலும் சிகரெட் மற்றும் மது அருந்தாமல் நடித்த அமரர் எம்.ஜி. ஆரின் கட்டுப்பாட்டை பாராட்டலாம் தானே. ( ஒளிவிளக்கு திரைப்படத்தில் மயக்கமருந்து அடித்து கட்டாயப் படுத்தி மது ஊற்றி விடுவார்கள். நினைத்த்தை முடிப்பவனில் புகைக்க ஆயத்தமாவார் அதற்குள் தடுக்கவும் படுவார்). தனது திரைப்படங்களில் எந்தவொரு கதாபாத்திரமும் புகைக்காமல் இருப்பதோடு படத்தின் பின்னணியில் ஒரு சட்டத்தில் கூட புகையிலை மற்றும் சிகெரெட் விளம்பரங்கள் இல்லாமல் அக்கரையாகப் பார்த்துக் கொள்ளும் நடிகர் ஜாக்கிச் சானின் சமூக அக்கரையையும் கண்டிப்பாய் பாராட்டத்தானே வேண்டும்.
ஆடுகளம் திரைப்படத்தில் சேவல் சண்டை குறித்து தொகுக்கப் பட்டிருக்கும் விஷயங்களுக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு பாராட்டுகளை சொல்லலாம். ஆனால் இரண்டு காட்சிகளுக்கு ஒருமுறை நாயகனை சாராயக் கடையில் சரக்குடன் காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன? ஏன் டாஸ்மாக்குகள் நிறைந்த சமூகத்தில் குடிக்காத இளைஞனைக் காட்டுவது என்ன அப்படியொரு குற்றமா? எனக்கு குடி ஒத்துக்காதுன்னே? என்று ஒரு வசனத்தில் முடித்து விட முடியுமே. எதார்த்தமாய் காட்டுகிறேன் என்கிற பேரில் எல்லாரும் குடிக்கிறார்கள் என்று காட்டவா? இல்லை எங்கள் சாமி கூட குடிக்குப்பா என்று வளரும் இளைஞர் பட்டாளத்தை குடிக்க தயார் படுத்தவா?
இல்லை எங்கப்பனும் எங்காத்தாளும் குடிச்சிப்புட்டு குடித்தனம் நடத்திதான் என்ன பெத்தாங்க நான் மட்டும் குடிக்காம் இருக்கவா? என்று குடிக்கிறார்களா? என்ன காரணம்? தமிழ் சமூகமே ஒரு குடிகார, நாகரீகமற்ற எதற்கெடுத்தாலும் வெட்டும் குத்தும் நடத்துகிற ஒரு சமூகம் என்று பதிவு செய்து என்ன பயன்? அப்படித்தான் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சமூகத்தின் பண்பாட்டையை பதிவு செய்வது எவ்வளவு பெரிய துரோகம்.
ஒரு சமூகத்தின் பண்பாடு அச்சமூகத்தின் வாயிலாக இலக்கியத்திலும், கலைகளிலும் பதிவு செய்யப் படுபவைகளை பிற்காலத்தில் குறிப்பிட்ட கால கட்டத்தின் பதிவாக பாடமாக கவனிக்கப் படும். ஆனால் சமீபமாக நம் பண்பாடு எந்த அளவுக்குப் பதிவாகி உள்ளது?அழகானப் பெண்களை மட்டுமே காதலிக்கும் நாயக பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பலரும் ஆண்ழகன்கள் இல்லையே. கேட்டால் காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இவர்களுக்குத்தான் அறிவிருக்கிறதே.
ஆடுகளம் திரைப்படத்தில் தணுஷின் நடிப்பு, நடனம் பற்றி பெரிதாய் சிலாகிக்கத் தேவையில்லை. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ( ரசிகராக்க் கூட இருக்கலாம்) எழுந்து ஆடினார். அவர் தணுஷை விடவும் சிறப்பாக ஆடியது போலத்தான் இருந்தது. தணுஷ் நடித்த கருப்பு கதாபாத்திரத்தில் பருத்திவீரனின் கார்த்தி, மைனாவின் வித்தார்த், களவானியின் விமல் அல்லது தென் மேற்கு பருவக்காற்றின் விஜயசேதுபதி ஆகிய அதே இருபது நாள் தாடிக்காரர்களில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இது தணுஷால் மட்டுமே செய்ய முடிந்திருக்கக் கூடிய பார்த்திரமென்று சொல்வதெல்லாம் மிகைதான்.
கவிஞர் வ.ஐ.சா. ஜெயபாலனின் நடிப்பு குறிப்பிடத் தக்கது. அவர் அப்பாத்திரத்திற்கேற்ற நல்லத் தேர்வு. மிகையில்லா நடிப்பு. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார். கிஷோரின் நடிப்புக்கும் பெரிய ஆரவாரங்கள் தேவையில்லை தான்.
நடிகை டாப்சிக்கு இப்படத்தில் அழகாய் உடுத்திக் கொண்டு அங்குமிங்கும் ஒரேயொரு நோட்டுப்புத்தகத்தை சுமப்பதுதான். அவர் அழகாய் இருக்கிறார். படம் முழுக்க அழகாய் காட்டப் பட்டுள்ளார். அவ்வளவுதான். அவரது துரதிர்ஷ்டம் டூயட்களில் ஆடவோ டப்பாங்குத்துகளில் குளுக்கவோ வெளிநாட்டு வீதிகளில் இடுப்பசைக்கவோ வாய்ப்பில்லாமல் போய் விட்டது. பொசுபொசுவென்றிருக்கும் நடிகையை வைத்துக் கொண்டு கலக்கலான ஒரு பாடலை வைக்காமைக்காக இயக்குனரைப் பாராட்டலாம்.
ஒரு படைப்பானது எதாவது ஒரு வகையில் பார்வையாளனை பாதிக்க வேண்டும். படைப்பை கண்ட ஒரு சிறு பொழுதுக்கேனும் அவருக்குள் சலனத்தை உண்டாக்கிய வண்ணம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அது பற்றி பேசிக் கொண்டிருக்கவாவது வேண்டும். ஆனால் ஆடுகளம் போன்ற படங்களை உடனடியாக மறக்க வேண்டியதிருக்கிறது.
ஒரு சிறு பிரச்சனையின் பொருட்டு காவல் நிலையம் போக நேர்ந்தாலும் அப்புறம் ஆயுசுக்கும் அவர்கள் தீவாளி, பொங்கல் மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தில் நடந்து முடியும் குற்றங்களைத் தொடர்ந்து வீடு தேடி வந்து விடுவார்கள் என்பது நாடறிந்த உண்மை. இந்நிலையில் திரைப்படங்களில் மட்டும் இந்த எதார்த்தம் மீறப் படுவது ஏன்? புனைவு சமாச்சாரம் தான் ஆனால் அதிலொரு நம்பகத்தன்மை வேண்டாமா?
இன்று விற்பனை சரக்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளிடம் எந்த நியாமும் பேசிக் கொண்டிருக்க முடியாது. பிரபல திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் நான்கு நிமிடங்களுக்கு குறையாமல் ஓடும் ஒரு கழுத்தறுப்பு வன்முறைக் காட்சியை சுட்டி ’காட்சி ஊடகத்தில் இவ்வாறு காட்டுதல் சர்வதேசிய அளவில் தடை செய்யப் பட்ட ஒரு விஷயம் அதுவுமில்லாமல் அக்காட்சி மனதிலும் உடலிலும் ஒரு அச்சத்தை உண்டு பண்ணுகிறது, அப்படியான காட்சியை ஏன் வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு; ’நீங்க பயப்படுனுமுன்னுதான் வச்சேன்’ என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்லிவிட்டு நகர்ந்த அந்த இயக்குனரிடம் பெரிதாய் எதை எதிர்பார்க்க முடியும்.
இளைய சமூகத்தை லட்சிய பாதைக்கு கூட்டிப் போகவில்லை, படித்து பண்டிதனாக அழைக்கவில்லை. நாகரீகமாக உடுத்த பேச சொல்லிக் கொடுக்கவில்லை மாறாக எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தாலும் செட்டில் ஆகி விடலாம் என்று இன்னும் கீழ்த்தரமாக இருக்க திரைகட்டி காட்சியாய் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் தப்பு செய்யலாம் கடைசியில் அழகான பெண்ணுடன் எங்காவது ஓடிப் போய் வாழலாம் என்பது போன்ற எதார்த்தமில்ல கதைப் பாணி இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடருமோ?.
நடக்காததையா நாங்க காட்டுறோம் என்று காட்டி காட்டி நடக்கச் செய்கிறார்கள். தமிழகத்தின் தலைவிதியே அதுக்கு இது மேல் என்று ஏற்றுக் கொள்ளும் நிலைதான். ஆடுகளம் போன்ற பண்பாட்டு சறுக்கள்கள் மத்தியில் எந்திரன் போன்ற மகா மட்டங்கள் தேவலாம் என்று படுகிறது.
No comments:
Post a Comment